திருவனந்தபுரம்: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் டிசம்பர் 31ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி, அதில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
அமைச்சரவையின் இந்த முடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அவர் வரும் ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளதால், தற்போது சிறப்பு கூட்டம் நடைபெறுவதற்கான அவசியம் இல்லை என பதிலளித்தார். மேலும், மாநில அரசின் வேண்டுகோளையும் மறுத்துவிட்டார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், இந்திய ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
சட்டப்பேரவை சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டிய அவசரத்தை அமைச்சரவை தான் தீர்மானிக்க வேண்டும். ஆளுநர் மாநில அரசின் மீது நம்பிக்கை வைத்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை அனுமதிக்காத ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரிடம் மனு வழங்கும் ராகுல் காந்தி!