திருவனந்தபுரம் : பிரதமர் மோடியின் கேரளா பயணத்தின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என மாநில பாஜக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார். வரும் 24 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இருந்து இந்திய விமானப்படையின் விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சிக்கு செல்கிறார்.
அங்கு பாஜக ஆதரவு அமைப்பு நடத்தும் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து பாஜக இளைஞர் பாசறை நடத்தும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அன்றிரவு தாஜ் மலபார் ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் பிரதமர் மோடி மறுநாள் கொச்சியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு செல்கிறார்.
காலை 10.30 மணிக்கு கேரளா மாநிலத்திற்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தை கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வரை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பிரதமர் மோடி பல்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து அங்குள்ள மத்திய மைதானத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றுகிறார். இந்த விழாவின் போது ரயில்வேத் துறையின் நான்கு திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் தொழிநுட்ப நகருக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவு பெற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கேரளா பயணத்தின் போது தற்கொலை படைத் தாக்குதல் நடத்த உள்ளதாக மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர். கேரள் மாநில பாஜக அலுவலகத்திற்கு கடந்த சில நாடகளுக்கு முன் இந்த மிரட்டல் கடிதம் கிடைத்ததாக மாநில தலைவர் சுரேந்திரன் தெரிவித்து உள்ளார்.
மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த இந்த கடிதம் கடந்த வாரம் சுரேந்திரனுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அவர் டிஜிபி அனில் கன்ட்டிடம் புகார் அளித்து உள்ளார். பிஎப்ஐ அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல் கடிதம் தொடர்பாக கேரள காவல்துறை மற்றும் உளவுத் துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து அறிய சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : சரக்கு லாரி - தனியார் பேருந்து மோதி கோர விபத்து - 7 பேர் பலி!