எர்ணாகுளம்: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில், மலையாள இளம் நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட இருவரை கேரள காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இளைஞர்கள் கைது
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் மலையாள இளம் நடிகையிடம் பாலியல் சீண்டல் செய்ததாக மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்த ராம்ஷாத், ஆதில் ஆகிய இரண்டு இளைஞர்களை கேரள காவல் துறையினர் நேற்று (டிச. 20) கைதுசெய்தனர்.
வழக்குப்பதிவு
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவு (பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல்) சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் தங்கள் அறிக்கையைப் பதிவுசெய்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 17) மலையாள இளம் நடிகை தனது தாய், சகோதரி, சகோதரருடன் வணிக வளாகத்திற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடிகை வெளியிட்ட காணொலி
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்ட அந்த நடிகை, "தனது குடும்பத்தினருடன் வணிக வளாகத்தில் இருந்தபோது, இரண்டு ஆண்கள் தன்னை கடந்துசென்றனர். அவர்களில் ஒருவர் என் மீது கைவைத்து தவறாக நடந்துகொண்டார். மேலும், என்னையும் எனது சகோதரியையும் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினர்" எனக் குற்றம் சாட்டினார்.
மாநில பெண்கள் ஆணையம், தாமாக முன்வந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.