டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 8) பிரதமர் நரேந்திர மோடியை தேசிய தலைநகரில் வீடு வீடாக ரேஷன் பொருள்கள் விநியோக திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “இன்றுவரை, தேசிய நலனுக்கான அனைத்து வேலைகளிலும் நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்துள்ளோம். அந்த வகையில், மக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் அளிக்கும் எங்களின் திட்டத்துக்கும் நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.
மேலும், இந்தத் திட்டம் நாடு முழுவதிலும் கோவிட் காலங்களில் செயல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆகையால் டெல்லியை சேர்ந்த 70 லட்சம் ஏழை எளியோர்கள் பயன்பெறும் இத்திட்டத்தை நிறுத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
வீடு வீடாக ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். ஆனால் இத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதிவழங்கவில்லை. இந்நிலையில் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில், “ரேஷன் மாபியாக்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு இத்திட்டம் அவசியம்” எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம்!