டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை நீக்கக் கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினேஷ் போகாட், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளாமனா மல்யுத்த வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி போலீசார் தங்கள் மீது அடக்குமுறையை ஏவி வருவதாகவும், தங்களது போராட்டத்தை குலைக்க சதி செய்வதாகவும் வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே இன்று(மே.28) புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி செல்ல முயற்சித்தனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். வீராங்கனைகளை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். புதிய நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்று மகா பஞ்சாயத்து நடத்தவிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் மீது அடக்குமுறையை ஏவிய டெல்லி போலீசாருக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி போலீசார் மல்யுத்த வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் வீடியோவை கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நாட்டுக்குப் பெருமை சேர்த்த நமது விளையாட்டு வீரர்களிடம் போலீசார் இது போல மோசமாக நடந்து கொண்டது மிகவும் தவறு என்றும், கண்டிக்கத்தக்கது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீசாருக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதவிட்டுள்ள மம்தா, "டெல்லி காவல்துறை சாக்சி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பிற மல்யுத்த வீரர்களை கையாண்ட விதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். நமது சாம்பியன்கள் இப்படி நடத்தப்படுவது வெட்கக்கேடானது. ஜனநாயகம் சகிப்புத்தன்மையை அடிப்படையாக கொண்டது. ஆனால், எதேச்சதிகார சக்திகள் சகிப்புத்தன்மையின்றி தங்களை எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகின்றன. கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். நான் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சித்த மல்யுத்த வீரர்கள் கைது!