ஹைதராபாத் (தெலங்கானா): அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில், ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்னும் பயணத்தை ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தொடங்கி நடத்தி வருகிறார். 55வது நாளான நேற்று (நவ 1) தெலங்கானா மாநிலத்தின் சம்ஷாபாத்தில் உள்ள மாதா கோயிலில் இருந்து நடைபயணம தொடங்கப்பட்டது.
நெக்லஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை அருகே நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “டிஆர்எஸ் மற்றும் பாஜக பல சமயங்களில் ஒன்றாகச் செயல்பட்டுள்ளன. தேர்தல் வரும்போது இரு கட்சிகளும் ஒருவரையொருவர் விமர்சிப்பதுபோல் நடிக்கின்றன.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அழைத்தால் பிரதமர் மோடி பதிலளிப்பார். மத்திய பாஜக அரசும், தெலங்கானாவில் உள்ள டிஆர்எஸ் ஆட்சியும் விவசாயிகளின் போராட்டத்தின்போது அவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. விவசாயிகள் முதல் இளைஞர்கள் வரை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
பொறியியல் பட்டதாரிகள் ஸ்விகியில் வேலைக்குச் செல்கின்றனர். நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. விமான நிலையங்கள், எல்ஐசி, டெலிகாம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு மலிவான விலையில் விற்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: மாநில அரசின் முடிவுகளில் ஆளுநர் தலையீடு இருக்க கூடாது - ராகுல் காந்தி