ஹைதராபாத்: தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச்செயலக கட்டடத்திற்கு அம்பேத்கரின் பெயரை வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைமைச் செயலக கட்டடத்திற்கு அம்பேத்கரின் பெயரை வைப்பது தெலங்கானா மக்களுக்குப் பெருமை. அனைத்து துறைகளிலும் சமத்துவம் வேண்டும் என்ற அம்பேத்கரின் கொள்கையுடன் தெலங்கானா அரசு செயல்பட்டு வருகிறது.
அம்பேத்கர் தொலைநோக்குப் பார்வையுடன் அரசியலமைப்பில், புதிய மாநிலங்கள் அமைப்பது தொடர்பான 3ஆவது பிரிவை வைத்த காரணத்தால், தனி தெலங்கானா மாநிலம் சாத்தியமானது. அம்பேத்கரின் கொள்கைகளையே தெலங்கானா அரசு செயல்படுத்தி வருகிறது. தலைமைச்செயலகத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்டுவதன் மூலம் தெலங்கானா மாநிலம் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற கட்டடத்திற்கு, அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 13ஆம் தேதி தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.