டெல்லி: டெல்லியில் கலால் கொள்கையில் மாற்றங்களை செய்து, விதிகளை மீறி தனியார் மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது பாஜகவினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த வழக்கு பூதாகரமான நிலையில் கடந்த ஆண்டு புதிய கலால் கொள்கையை ரத்து செய்த ஆம் ஆத்மி அரசு, மீண்டும் பழைய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இந்த வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மத்திய பாஜக அரசு திட்டமிட்டு தங்களை அச்சுறுத்துவதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதனிடையே இந்த மதுபான ஊழல் புகாரில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை கவிதா மறுத்து வந்தார்.
இந்த வழக்கில் அதிரடி நடவடிக்கையாக, சிபிஐ அதிகாரிகளால் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக, டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் கேசிஆரின் மகள் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக மார்ச் 9ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. முன்னதாக, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றக் கோரி மார்ச் 10ஆம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதா அறிவித்திருந்தார். அதன்படி, நாளை போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதா டெல்லியில் இன்று(மார்ச்.9) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றக்கோரி மார்ச் 10ஆம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் நடத்துவது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டோம்.
ஆனால், மார்ச் 9ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. போராட்டத்தை கருத்தில் கொண்டு, 16ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக கூறினேன், அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், 11ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஒப்புக் கொண்டேன்.
11ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்து விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரும்படி என்னை அறிவுறுத்தினர். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, அதனால் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்வோம்.
நாட்டில் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். சாதாரண மக்களை வஞ்சிப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது?. அரசு ஏஜென்சிகளின் தலைவர்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்படும் போது, அக்னி வீரர்களுக்கு ஏன் பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது?.
கடந்த காலத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஆதரித்த சோனியா காந்திக்கு நன்றி கூறுகிறேன். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கேட்டுக்கொள்கிறேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 18 அரசியல் கட்சிகள் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளன" என்று கூறினார்.