ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள ஜிவான் பகுதியில் 14 இந்திய ரிசர்வ் காவல் படையினர் பயணம் செய்த வாகனம் மீது பயங்கரவாதிகள் நேற்று (டிசம்பர் 13) மாலை 5.50 மணியளவில் கொடூரத் தாக்குதல் நடத்தினர்.
சம்பவம் நடைபெற்ற பந்தா சௌக் என்ற இடத்திற்கு விரைந்த ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அப்பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு
இந்தச் சம்பவம் குறித்து ஆளுநரிடம் விவரங்களைக் கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, குற்றச்செயலில் ஈடுபட்டவர்களைத் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு காவலரும் இன்று (டிசம்பர் 14) காலை உயிரிழந்தார். இதை காவல் துறை மூத்த அலுவலர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
பயங்கரவாதி ஒருவருக்கு படுகாயம்
இது குறித்து, அவர் மேலும் கூறுகையில், "காவலர் ரமீஸ் அகமது, உதவி துணை ஆய்வாளர் (ASI) குலாம் ஹாசன், மூத்த காவலர் ஷபீக் அலி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மற்ற 11 காவலர்கள் நலமுடன் இருக்கின்றனர்" என்றார்.
காவலர் ரமீஸ் அகமதுவின் உடலுக்கு காஷ்மீர் காவல் துறைத் தலைவர் விஜய் குமார், பிற காவல் துறை அலுவலர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் காஷ்மீர் புலிகள் என்னும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் எனத் தகவல் வந்துள்ளதாக காஷ்மீர் காவல் துறைத் தலைவர் விஜய் குமார் கூறினார். மேலும், காவல் படையினர் நடத்திய எதிர்த் தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: VIRAL VIDEO: தாலி கட்டுறது முன்னாடி இப்படி ஒரு பிரச்சினையா?