ஸ்ரீநகர் (ஜம்மூ-காஷ்மீர்): தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஹ்வாது கிராமத்தில் நேற்று (செப்- 27) மாலை நடந்த என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதிகளில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக அஹ்வாடோ கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதில் இரண்டு தீவிரவாதிகள் பிடிபட்டதாகவும் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த என்கவுண்டரில், ஜேஇஎம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் காஷ்மீர் மண்டல காவல் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை குல்காமில் வசிக்கும் முகமது ஷபி மற்றும் முகமது ஆசிப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.
மேலும், இவர்கள் குல்காம் மாவட்டத்திலுள்ள பட்புரா பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்பு படை வீரர் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி இந்த மாதத்தில் காஷ்மீரின் தெற்கு மாவட்டங்களில் நடந்த ஐந்து ஆயுத என்கவுண்டர்களில் இதுவரை ஏழு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு இதுவரை 142 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 34 பேர் பாகிஸ்தானியர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:காஷ்மீரில் பொருளாதார பயங்கரவாம் நடக்கிறது - மெஹபூபா முஃப்தி