பெங்களூரு: கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தின் மதுகிரி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். 23 வயதான இவர் பள்ளி படிப்பை நிறைவு செய்யாதவர். நடிகை அனுஷ்கா நடித்த 'அருந்ததி' திரைப்படத்தால் கவரப்பட்ட பிரசாத், 25 முறைக்கும் மேலாக அத்திரைப்படத்தை பார்த்துள்ளார்.
அவரின் பெற்றோரின் அறிவுரைகள் எதையும் ஏற்றுக்கொள்ளாத பிரசாத் தொடர்ந்து அருந்ததி படத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும், அத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான அருந்ததி, தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக்கொள்வதன் மூலம், மீண்டும் மறுபிறவி எடுப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்த படத்தின் மேல் பிரசாத்திற்கு அதிக ஆர்வத்தை துண்டியது இந்த பகுதிதான் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அருந்ததி கதாபாத்திரம் தனக்கு தீவைத்துக்கொள்வது போன்று, கிராமத்திற்கு வெளியே ஒரு மறைவான பகுதியில் பிரசாத்தும், 20 லிட்டர் பெட்ரோலை தன் மீது ஊற்றி தனக்கு தானே தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக சென்றவர்கள் இச்சம்பவத்தை பார்த்து, அவர் மீது இருந்த தீயை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக விக்டோரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஆக.10ஆம் தேதி உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு முன்னர், பிரசாத் தனது தந்தைக்கு வீடியோ ஒன்று அனுப்பியுள்ளார். அதில் தன்னை தானே தீவைத்து எரித்துக்கொண்ட பின் மறுபிறவி எடுப்பேன் என பிரசாத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை அனுஷ்கா நடிப்பில் 2009ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் அருந்ததி. இத்திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் சல்மான்கான் சுட்டுக்கொன்ற மான்களுக்கு நினைவிடம்