கர்நாடகாவில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பல கிராமங்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
கிருஷ்ணா, துங்கபத்ரா, வரதா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அம்மாநில முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
உடனடியாக ரூ.50 ஆயிரம் நிவாரணம்
இதுகுறித்து அவர் கூறுகையில், "75 விழுக்காடு அளவிற்கு வீடுகள் சேதமடைந்தோரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும், 50 விழுக்காடு அளவிற்கு வீடுகள் சேதமடைந்தோருக்கு 3 லட்சம் ரூபாயும் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.
மேலும், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் அவசரமாக வீடுகளை சரிசெய்ய குடும்பத்துக்கு உடனடியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
தற்காலிகமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 முன்கூட்டியே நிவாரணமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத்தொடர் மழையால், 466 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. அதனை சரிசெய்வதற்கான பணிகளுக்காக, மாநில அரசு சார்பில் 500 கோடி ரூபாயும், தேசிய பேரிடர் மீட்பு நிதியாக 150 கோடியும் ஒதுக்கிடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யமுனா ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பு... 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்!