தும்கூர்(கர்நாடகா): கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி வகுப்பறையிலேயே மது அருந்திய ஆசிரியையை அம்மாநில பள்ளி கல்வித்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது. கங்கலக்ஷ்மா எனும் இந்த ஆசிரியை வகுப்பறையிலேயே மது அருந்தி, குழந்தைகளை அடித்து, சக ஆசிரியர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் இவரை அறையில் வைத்துப் பூட்டி, இது குறித்து பள்ளி கல்வித்துறைக்கு புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து வந்த பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ஹனுமா நாயக், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது கிராமத்து மக்கள் அந்த ஆசிரியையின் மேஜை டிராயரைத் திறந்து பார்க்கச்சொன்னனர்.
அதைத் திறந்து காட்ட அந்த ஆசிரியை மறுக்க, அந்த டிராயரைப் புகார் அளித்த பெற்றோர் உடைத்தனர். அதில் மது பாட்டில்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி கல்வித்துறை அலுவலர் அந்த ஆசிரியையை பணியிடைநீக்கம்செய்து ஆணை வெளியிட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.