பெங்களூரு : கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து வெள்ளிக்கிழமை (ஆக.6) அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி மாநிலத்தில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் வருகிற 23ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதனை மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மாநிலம் முழுவதும் தற்போது அமலில் உள்ள இரவு ஊரடங்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே இனி அமலுக்கு வருகிறது.
கேரளா மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் உள்ள மாவட்டங்களில் வார நிறைவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்தப் புதிய விதிகள் ஆக.6 (அதாவது இன்று) முதல் அமலுக்குவரும்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கர்நாடக காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மைசூரு, குடகு, தட்சிண கன்னடம் மற்றும் சாம்ராஜநகர் (கேரளாவை ஒட்டிய) மற்றும் பெலகாவி, விஜயபுரா, கல்புர்கி மற்றும் பீதர் (மகாராஷ்டிரா எல்லையில்) ஆகிய இடங்களில் வார இறுதி ஊரடங்கு விதிக்கப்படும்.
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்துள்ளோம். அதன்படி, 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் ஆகஸ்ட் 23 முதல் மீண்டும் திறக்கப்படும். ஆகஸ்ட் இறுதியில் கோவிட் நிலைமையை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். அதன்பின்னர் மற்ற முடிவுகள் எடுக்கப்படும்.
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்திற்குள் வருபவர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட எதிர்மறை இல்லாத ஆர்டி-பிசிஆர் அறிக்கை கட்டாயம்” என்றார்.
நாட்டின் பல பகுதிகளில் தொற்றுநோயின் இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய பிறகு கர்நாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பசவராஜ் பொம்மை செய்தியாளர் சந்திப்பின்போது, “சுகாதார நிபுணர்களுடன் பேசிய பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுத்துள்ளோம். பள்ளிகளில் கோவிட் விதிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
இதையும் படிங்க : தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு?