ஷிவமோகா: இஸ்லாமிய குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்ந்து படையெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளையோ அல்லது இஸ்லாம் மதத்தைச் சார்ந்தோரை தம்மைப் போன்ற மனிதர்கள் என்பதை மறந்து குற்றம் சாட்டப்படுகிறார்கள். தவறு இழைக்காவிட்டாலும் குற்றவாளிகள் என பிம்பப்படுத்தப்படுவது இந்தியாவில் சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
முன்னதாக கர்நாடகத்தில் எழுந்த ஹிஜாப் விவகாரத்திலிருந்து தற்போது இந்தச் சம்பவம் வரை இஸ்லாமியர்களுக்கான உரிமைகள் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், ஷிவமோகா நகர் பகுதியில் அரசு உருது முதன்மை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று ஆசிரியர் ஒருவர், வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, இரு மாணவர்கள் பாடத்தைக் கவனிக்காமல் பேசி விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இதனால் எரிச்சல் அடைந்த ஆசிரியர் பேசி விளையாட்டிலிருந்த அந்த குழந்தைகளை, "இங்கு அமர்ந்து பேசுவதற்குப் பதிலாகப் பாகிஸ்தான் சென்று பேசுங்கள்" என ஒருமையில் கடிந்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த குழந்தைகள், இதுகுறித்து அவர்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஷிவமோகா தொகுதியின் பள்ளி கல்வி அலுவலர் நாகராஜின் பார்வைக்கு இட்டுச் சென்றுள்ளனர். மேலும் குழந்தைகளை ஒருமையில் சாடிய ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஷிவமோகா பள்ளி கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. உடனடி நடவடிக்கையாக மாணவர்களை ஒருமையில் சாடிய ஆசிரியரை, கடந்த சனிக்கிழமை(செப்.02) ஷிவமோகா நகரில் உள்ள அரசு உருது முதன்மை தொடக்கப் பள்ளியிலிருந்து ஷிவமோகா தொகுதியில் உள்ள கிராமப்புற பள்ளிக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து ஷிவமோகா தொகுதி பள்ளி கல்வி அலுவலர் நாகராஜ் ஈடிவி பாரத்-க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “இந்த தகவல் என் பார்வைக்குக் கொண்டு வந்தவுடன் சம்பவம் நடைபெற்ற பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரிக்கப்பட்டது. பின்னர் துரிதமாகச் செயல்பட்டு, ஒருமையில் கடிந்த ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், குழு அமைத்து தீவிரமாக விசாரிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கும்பகோணம் துக்காச்சி கோயில் கும்பாபிஷேகம்.. அனைத்து மதத்தினரும் பங்கேற்று சாமி தரிசனம்.. இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!