ஹவேரி: கர்நாடகாவில் கடந்த 2021ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில், ஹவேரி மாவட்டத்தில் உள்ள தேவரகுடா கிராம பஞ்சாயத்து தலைவராக மல்தேஷ் நயரா தேர்வு செய்யப்பட்டார். தேவரகுடாவில் உள்ள மால்தேஷ் சுவாமி கோவிலின் தலைவர் சந்தோஷ் குருஜி மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களின் ஆதரவோடு மல்தேஷ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், 15 மாதங்களுக்குப் பிறகு தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால், வாக்குறுதியளித்தபடி மல்தேஷ் பதவி விலக மறுத்ததாகத் தெரிகிறது. அதோடு பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகப் பஞ்சாயத்து உறுப்பினர்களைக் கவர முயற்சித்ததாக தெரிகிறது.
இதையடுத்து மல்தேஷ்க்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர சாமியார் சந்தோஷ் குருஜி முடிவு செய்தார். அதனால், பஞ்சாயத்து உறுப்பினர்களை மல்தேஷ் விலைக்கு வாங்கிவிடக் கூடாது என்பதற்காக, பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டில் உறுப்பினர்களைத் தங்க வைத்தார். சுமார் 40 நாட்கள் அவர்களை ரிசார்ட்டில் தங்க வைத்ததாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து நேற்று(டிச.6) உறுப்பினர்களை விமானம் மூலம் தேவரகுடாவுக்கு அழைத்து வந்தார். இதையடுத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் மல்தேஷ்க்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், பஞ்சாயத்துத் தேர்தல்களிலேயே குதிரை பேரம், ரிசார்ட் அரசியல் போன்றவை நடப்பது ஜனநாயக அரசியல் நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.