பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு இரு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் போராட்டி வருகின்றன. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக தேர்தல் பணிக் குழு தொடங்கப்பட்டு தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று கர்நாடகா பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் 6வது முறையாக பிரதமர் மோடி கர்நாடாகவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
மண்டியா, மற்றும் தார்வாரில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொண்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதில் குறிப்பாக பெங்களூரு - மைசூரு இடையில் 8 ஆயிரத்து 480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச் சாலையாக கட்டமைக்கப்பட்டுள்ள 275 எண் தேசிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
இந்த விரைவுச் சாலை மூலம் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 75 நிமிடங்களில் சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை அந்த இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 3 மணி நேரமாக இருந்த நிலையில் புதிய சாலை வசதியால் அது குறைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து மைசூரு - குசால்நகர் இடையே 92 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 ஆயிரத்து 130 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலையால் மைசூரு- குசால்நகர் இடையே தற்போது உள்ள பயண நேரமான 5 மணி நேரம் பாதியாக குறையும் என கூறப்பட்டு உள்ளது.
தொடர்ந்து விமானம் மூலம் தார்வார் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு கடந்த 2019ஆம் ஆண்டு 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தார்வார் ஐஐடியை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து சித்தரோட சுவாமி உப்பள்ளி ரெயில் நிலையத்தில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 1,507 மீட்டர் தூர நடைமேடையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு முக்கிய நகரங்கள் போலீசார் வசம் சென்றுள்ளன. உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. முக்கிய சாலைகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சிகளின் இடையே சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து பாஜக கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அரசியலுக்கு வராதது ஏன்? - மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்!