பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தனது மகனை பார்க்க வந்த பெண்ணிடம் போதைப்பொருள் சிக்கியது. இதுகுறித்து சிறைக்காவலர்கள் கூறுகையில், பெங்களூருவின் ஷிகாரிபாளையத்தை சேர்ந்த முகமது பிலால் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை காண அவரது தாயார் ஜூன் 13ஆம் தேதி சிறைக்கு வந்தார். அப்போது அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது" எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கூறுகையில், "அந்த பெண்ணிடம் யாரோ அடையாளம் தெரியாத நபர் துணிப்பை ஒன்றை கொடுத்து, உங்களுடைய மகன் கேட்டதாக கூறவே அதை அப்படியே அவர் சிறைக்கு கொண்டு வந்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 5 லட்சம்.
இந்த போதைப்பொருள் சிறையில் விற்பனை செய்ய எடுத்துச்செல்லப்பட இருந்தது. இதில் சிறைச்சாலையில் இருக்கும் சிறைக்காவலர்கள், அலுவலர்கள் உள்பட பலருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டம்