பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரராக இருந்தார். இதனிடையே, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, தன்னிடம் சாலைகள் அமைக்கும் ஒப்பந்தத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய 40 விழுக்காடு கமிஷன் கேட்பதாக புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து, பிரதமர் மோடிக்கும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த நிலையில், உடுப்பியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதற்கு முன்பாக, சந்தோஷ் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில், தன் மரணத்துக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா மட்டுமே காரணம் என்று குறிப்பிட்டதாக தகவல் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஈஸ்வரப்பா மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "முதல்கட்ட தகவலில் தற்கொலை என்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் யார் என்பது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும்" என்றார்.
இந்த நிலையில், இன்று (ஏப். 14) சிவமொகாவில் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரப்பா, "நாளை எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்க உள்ளேன். மக்கள் அனைவருக்கும் நன்றி" என்றார். முன்னதாக ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவர் சிவராம பெருமாள் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்