பெங்களூரு (கர்நாடகா): கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையைக் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்து, அண்மையில் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. புதிய அணையைக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தது. தமிழ்நாடு விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த மார்ச் 21ஆம் தேதி மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு நிதி ஒதுக்கியதைக் கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேகதாது அணையைக் கட்டக்கூடிய கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மார்ச் 22ஆம் தேதி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், இன்று (மார்ச் 24), மேகதாதுவில் அணையைக் கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு எதிராக கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சட்டப்பேரவையில் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மேகதாது திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கர்நாடக சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் நாளை முக்கிய முடிவு