பெங்களூரு : சொத்துகுவிப்பு வழக்கில் சிபிஐயின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், மாநில துணை முதல்மைச்சருமான டி.கே. சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத 74 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளின ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டன. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்த நிலையில், 2020 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதன்பேரில் டி.கே.சிவக்குமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தன் மீதான சிபிஐயின் விசாரணை சட்டவிரோதமானது என்றும் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் டி.கே.சிவக்குமார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மீதான சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நடராஜன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் அவர் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து டி.கே. சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவர் மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீக்கி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு: 15 வருட விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் அறிவிப்பு!