பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இளைஞர் ஒருவரை காதலித்தது வந்ததாக தெரிகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சிறுமி தனது காதலனுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிறுமியை போலீசார் தேடினர். பின்னர் இளைஞருடன் இருந்த சிறுமியை கண்டுபிடித்தனர்.
அப்போது சிறுமிக்கு 18 வயது நிரம்பாததால், இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், சிறுமிக்கு 18 வயது முடிவடைந்ததும் அவரை திருமணம் செய்து கொண்டார். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இவர்களுக்கு குழந்தையும் பிறந்ததாக தெரிகிறது.
இதனிடையே போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி இளைஞர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று(பிப்.13) விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் திருமணம் செய்து கொண்டதால், போக்சோ வழக்கை ரத்து செய்யும்படி இளைஞர் தரப்பில் கோரப்பட்டது. அதோடு இளம்பெண் சிறுமியாக இருந்தபோது தனது விருப்பத்தின் பேரிலேயே இளைஞருடன் சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை ரத்து செய்ய பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் ஒப்புதல் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிமன்றம், தம்பதியினர் மற்றும் அவர்களது குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர் மீதான போக்சோ வழக்கு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: உத்தரகாண்ட்டில் மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது