கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த வாரம் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், கல்வி நிறுவனங்களில் அரசு உத்தரவின் படி சீருடை மட்டுமே அணிய வேண்டும். ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய பிரதிநிதிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், இந்த ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் தவுஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி போராட்டத்தில் பங்கேற்று பேசிய நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்துள்ளார். அவர், நாட்டின் அடிப்படை அமைப்புகளை சில விஷம சக்திகள் அச்சுறுத்தப் பார்க்கின்றன. முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதுபோன்ற சக்திகளை ஒடுக்க வேண்டியது அனைவரின் தேவை.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கர்நாடகா மாநில காவல்துறை விசாரணைக்கு அழைத்துவரப்படுவார்கள். மேலும் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளுக்கும் Y பிரிவு பாதுகாப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையுடன் இணைந்து அரசும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழமைவாய்ந்த விஷ்ணு சிலையை கடத்த முயன்ற நபர் பெங்களூருவில் கைது