பெங்களூரு : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை என்றும், நீர் இருப்பு, குடிநீர் தேவை, விவசாயிகளின் உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடத் தயாராக இருப்பதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள காவிரி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், காவிரி நீர் திறப்பு குறித்து பேசிய கர்நாடக துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை இலாக்காவை கைவசம் வைத்து உள்ள டி.கே சிவகுமார், நீதிமன்றத்தில் அரசின் நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக தெரிவித்து உள்ளார்.
மேலும், காவிரி ஆற்றில் உள்ள கேஆர்எஸ் அணை மற்றும் பிற அணைகளுக்கு மழை மற்றும் நீர்வரத்து குறித்த பதிவுகள் இருப்பதாகவும், பயிர் நடவு குறித்து விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளதாக கூறினர். மேலும் கர்நாடக விவசாய அமைச்சர் செலுவராய சுவாமியும் பயிர்களை நட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இரு மாநிலங்களும் நெருக்கடியான சூழலை சந்தித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு இவ்வளவு அவசரமாக நாட வேண்டிய அவசியமில்லை என்றார். மேலும் தண்ணீர் இருப்பு, மாநிலத்தின் குடிநீர்த் தேவை, விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கத் தயார் என்றும் சிவகுமார் கூறினார்.
அதேநேரம் தமிழக அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தற்போதைய சூழலை அறிந்து 8 ஆயிரம் கனஅடி மட்டுமே திறக்க அரசு முன்வந்துள்ளதாக கூறினார். தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கவலைப்பட அவசியம் இல்லை என்றும் இரு மாநிலமும் ஒன்று சேர்ந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் சிவகுமார் கூறினார்.
நிகழ்கால சூழலுக்கு ஏற்ப இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படுவ தமிழக அரசிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்த சிவகுமார், தமிழக விவசாயிகளை ஒருபோதும் துயரத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்றும் அதேபோல் கர்நாடக விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்த தமிழக அரசு விரும்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : "தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கக் கூடாது" - முதலமைச்சருக்கு பசவராஜ் பொம்மை கடிதம்!