கர்நாடகா: 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை(மே.10) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதோடு ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரதமர் மோடி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து நாளைய வாக்குப்பதிவுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், 80 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தேர்தல் அலுவலர்கள் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு செய்தனர்.
மொத்தம் 99,529 வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க பதிவு செய்திருந்த நிலையில், அதில் 94,931 பேர் வாக்களித்துள்ளனர். 80 வயதுக்கும் மேற்பட்டோர் 80,250 பேர் வாக்களிக்க பதிவு செய்திருந்தனர் - அதில் 76,120 பேர் வாக்களித்துள்ளனர். 19,279 மாற்றுத்திறளானிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க பதிவு செய்தனர். அதில் 18,811 பேர் வாக்களித்துள்ளனர்.
மொத்தமாக 97.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் குறிப்பாக, பெல்காம் மாவட்டத்தில் மொத்தமாக 8,636 வாக்காளர்கள் வீட்டில் இருந்து வாக்களித்துள்ளனர். இதில், 6,975 பேர் 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் - 1,661 பேர் மாற்றுத் திறனாளிகள்.
இதில், 100 வயதை கடந்த முதியவர்கள் சிலரும் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். சிக்கோடி தாலுக்காவில், 103 வயதான மகாதேவ மகாலிங்க மாலி உட்பட சிலர் வீட்டிலிருந்தே வாக்களித்தனர். மகாதேவ மகாலிங்க மாலிக்கு தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.