‘பிராண்ட் கர்நாடகா’ முத்திரையுடன் சில்லறை நகை விற்பனை நிலையங்களைத் தொடங்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தனியார் நகைக்கடைதாரர்களுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் அதே சமயம், அரசு சின்னத்துடன் தங்க நாணயங்களை விற்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான சாத்தியக்கூறுகளை அம்மாநில அரசு ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான பிராண்டுகளாக விளங்கும் மைசூர் சில்க்ஸ், மைசூர் சந்தன சோப்புகள் ஆகியவற்றின் வரிசையில் இந்த சில்லறை நகை விற்பனை நிலையங்களையும் செயல்படுத்த முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, இந்த விற்பனை நிலையங்களில் தங்கக் கட்டிகளும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்புகளைக் கருத்தில்கொண்டும் மாநிலம் முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, ஹட்டி தங்க சுரங்க நிறுவனத்தை, ’கர்நாடக மாநில (ஹட்டி) தங்க சுரங்க லிமிடெட் நிறுவனம்’ எனப் பெயர் மாற்றம் செய்யவும், ஹட்டி தங்க சுரங்கங்களை நவீனமயமாக்குவதற்கும், அதன் திறனை மேம்படுத்துவதற்கும் கர்நாடக அரசு திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.