ஹைதராபாத்: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். 2006ம் ஆண்டு வெளியான "கேங்ஸ்டர்" படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2008ம் ஆண்டு வெளிவந்த தாம் தூம் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 23) தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார் கங்கனா ரனாவத். இதையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "எனது பெற்றோர், எனது குருநாதர்களான சத்குரு, சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வரை என் எதிரிகள் என்னை ஓய்வெடுக்க விடவில்லை. அவர்கள் தான் என்னை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்கின்றனர். எப்படி போராட வேண்டும், வலிமையுடன் இருக்க வேண்டும் என கற்றுக் கொடுத்த என் எதிரிகளுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவராக இருப்பேன்.
நண்பர்களே எனது சித்தாந்தம் மிகவும் எளிமையாக இருக்கும். எனது நடத்தை மற்றும் எண்ணங்களும் எளிமையானவை தான். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நாட்டின் நலனுக்காக நான் தெரிவிக்கும் கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களிடம், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கங்கனாவின் பிறந்தநாளையொட்டி பாலிவுட் திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடப்பாண்டு கங்கனா கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி-2 படத்தில் கங்கனா நடித்துள்ளார். படத்தில் அவர் இடம்பெற்றுள்ள அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இது தவிர சீதா, மணிகர்னிகா ரிட்டன்ஸ், எமர்ஜென்சி, தேஜாஸ் உள்ளிட்ட படங்களில் கங்கனா நடித்து வருகிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அண்மையில் ரசிகர்களுடன் டிவிட்டர் உரையாடிய அவர், "பட வாய்ப்புக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். மதிப்பில்லாத எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என எனது தாய் சொல்லியிருக்கிறார். இது ஆணவமா, நேர்மையா எனக் கூறுங்கள். நான் பிற பெண்களை போல கிசுகிசுக்களில் சிக்குவது கிடையாது. யாருடைய உதவியும் இன்றி தன்னம்பிக்கையுடன் வாழ எனது தாய் கற்றுக் கொடுத்துள்ளார். மற்றவர்களைப் போல நான் ஹீரோக்கள் அறைக்குச் செல்வது கிடையாது. அதனால் தான் பாலிவுட் சினிமா மாஃபியாக்கள் என்னை தனிமைப்படுத்தி, சிறைக்கு அனுப்ப விரும்புகிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை, காதலித்ததாக கங்கனா குறிப்பிட்ட நிலையில் அவர் மறுப்புத் தெரிவித்தார். இதுதொடர்பாக பரஸ்பரம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.