இது தொடர்பாக அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அவர் ஒரு காட்சிப்பதிவையும் இணைத்து பதிவிட்டுள்ளார். அதில், ” அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக்க தமிழகத்தில் ஆளே இல்லையா என்கிற கேள்வியில் இன்றும் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், முறைகேடுகளை தட்டிக்கேட்டாலோ, வளைந்து கொடுக்கவில்லை என்றாலோ பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள்? வளையவில்லை என்றால் ஒடிப்பதுதானே இவர்களது வழக்கம். எவனோ ஒரு பேடி எழுதிய மொட்டைக்கடிதாசியின் அடிப்படையில் தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு மாற்ற முயலும் சூரப்பா மீது விசாரணை ஆணையம் வைத்துவிட்டனர்.
முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்கள் பற்றியும், வாகனங்களை பயன்படுத்தியது பற்றியும் விசாரித்து விட்டீர்களா? 60 லட்சம் வாங்கிக்கொண்டுதான் பேராசிரியர் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் வழங்குகிறார் என்று முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி குற்றாஞ்சாட்டினாரே? விசாரித்து விட்டீர்களா?
உள்ளாட்சி, மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் என அனைத்துத்துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என்று ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்புகிறார்களே, அதுகுறித்து விசாரித்து விட்டீர்களா? தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை. அதிலும் கறைவேட்டிகள் மூக்கை நுழைப்பது ஏன்? காசு கொடுத்து ஓட்டு வாங்குவதுபோல், மதிப்பெண் கொடுத்து மாணவர்களையும் வாங்க நினைக்கிறார்களா?
சூரப்பாவின் கொள்கை சார்புகள், அரசியல் நிலைப்பாடுகள் குறித்து நமக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஒருவர் தனது நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் நான் வேடிக்கை பார்க்க மாட்டேன். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் அடையாளத்தை சிதைத்து அழிப்போம் என சூரப்பாவிற்கும், அவர்போல் பணியாற்றுவோருக்கும் விடுக்கும் எச்சரிக்கை இது. சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பெரிய அதிகாரிகளே இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால் சாமானியனின் கதி என்ன?
இதை இனிமேலும் தொடரவிடக்கூடாது. இன்னொரு நம்பிநாராயணன் இங்கே உருவாகக்கூடாது. நேர்மைக்கும் ஊழலுக்குமான போரில் அறத்தின் பக்கம் நின்று இந்த ஊழல் திலகங்களை ஓடஓட விரட்ட வேண்டும் “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவுநாள்: ஓபிஎஸ், இபிஎஸ் ட்வீட்!