அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப்பை வென்று, அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏறத்தாழ 40 ஆண்டுகால செனட்டர் சபை உறுப்பினராக இருந்து பின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு,பின் நடப்புத் தேர்தலில் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியான கமலா ஹாரிஸும் அமெரிக்காவின் துணை அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இது அவரது உறவினர்கள் மற்றும் தமிழ்க்குடும்பங்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
"நான் முன்னர் சண்டிகரில் மருத்துவராக பணிபுரிந்த போது கமலா பலமுறை அங்கு வந்து என்னை பார்த்திருக்கிறார். கமலா தன் சிறுவயது முதல், நல்ல பண்புகளுடன் வளர்ந்தவள். அன்னை சொற்படி நடந்த அவள், எதையும் சிறப்பாக செய்து முடிப்பவள்; எதைச் சாதிக்க நினைத்தாளோ, அதை திறம்பட சாதித்தும் விட்டாள், கமலா", என்றார் அவரது சித்தி சரளா கோபாலன்.
"அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இதனால், எங்கள் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்", என்றார் நெகிழ்ச்சியாக.
கமலாவின் தாய் வழித் தாத்தா கோபாலனின் பூர்வீகம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம். கோபாலன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சிபெற்று பணி செய்திருக்கிறார். கமலாவின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையில் பிறந்து, மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கே குடியுரிமை பெற்று, பின்னாட்களில் பிரபல புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும் சமூக ஆர்வலராகவும் ஷியாமளா விளங்கினார். ஷியாமளாவின் இளைய சகோதரி தான், சரளா கோபாலன்.
கமலா ஹாரிஸ் தனது தேர்தல் பரப்புரையில் தனது 'சித்தி' குறித்து தமிழில் குறிப்பிட்டுப்பேசியது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதையும் படிங்க: ’இந்த வெற்றி அமெரிக்க மக்களுக்கு கிடைத்த புதிய விடியல்’: கமலா ஹாரிஸ்