டெல்லி: ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா, 100 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி டெல்லியில் இந்த யாத்ராவில், திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் ராகுல் காந்தி உடன் கமல்ஹாசன் மேற்கொண்ட உரையாடல், ராகுல் காந்தியின் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் 'ஹே ராம்(Hey Ram)' படம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய கமல்ஹாசன், "நான் இப்போது காந்தியைப் பற்றி அதிகம் பேசுகிறேன். ஆனால் அது ஆரம்பத்திலிருந்தே சரியாக இல்லை. என் தந்தை ஒரு காங்கிரஸ்காரர். ஆனால் நான் என்னுடைய பதின்பருவத்தில் இருந்தபோது எனது சூழல் என்னை காந்தியை கடுமையாக விமர்சிக்க வைத்தது. அப்போது என் தந்தை, 'வரலாற்றைப் படியுங்கள் நீங்கள் இன்றிலிருந்து பேசுகிறீர்கள் அவர் ஒரு வழக்கறிஞர்' என என்னிடம் கூறினார்.
இருப்பினும் எனது அப்பா என்னிடம் இது குறித்து வாதிடவில்லை. எனக்கு 24 - 25 வயதாக இருந்தபோது, நான் காந்தியை சொந்தமாக உற்று நோக்கினேன். பல ஆண்டுகளாக நான் அவரை படித்து படித்து ஒரு ரசிகனாகவே மாறிவிட்டேன். அதனால் தான் நான் காந்தியைக் கொல்ல விரும்பும் ஹே ராமை இணையான கொலையாளியாக ஆக்கினேன். ஆனால் அது மிகவும் தாமதமானது. அவர் விரும்பிய வேலையை வேறொருவர் செய்கிறார். அதுதான் படத்தின் கதை" என்றார்.
தொடர்ந்து "படம் குறித்தான யோசனை உங்களுக்கு வந்ததா?" என ராகுல் கேட்க, "ஆம் வந்தது. எனது அப்பாவிடம் (மகாத்மா காந்தி) மன்னிப்பு கேட்கவே இப்படத்தை நான் எடுத்தேன்" என கமல் பதிலளித்துள்ளார். கமல்ஹாசனின் இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பல பரிணாமங்களில் வெளிவந்த 'ஹே ராம்' திரைப்படம், 47வது தேசிய திரைப்பட விருது நிகழ்வில் 3 விருதுகளை பெற்றது. மேலும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கும் அனுப்பப்பட்டது. அதேநேரம் இப்படம் குறித்து தற்போது வரை பல்வேறு விமர்சனங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழர்கள் காட்டும் அன்பை வேறு யாரிடமும் கண்டதில்லை - ராகுல்காந்தி