1932 ஜனவரி 5ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதில் மிகவும் சிரமப்பட்டார். சிறு வயது முதலே இந்துத்துவ கொள்கைகளை ஏற்ற கல்யாண் சிங், தன்னை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் அரசியலில் களமிறங்கிய இவர், ஜன சங்கம், ஜனதா கட்சி, பாஜக என பயணத்தை தொடர்ந்தார். பாஜக இவரை உத்தரப் பிரதேச முதலமைச்சராக்கி அழகு பார்த்தது. உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்த இவர், ராமர் கோயில் பிரச்னையில் தீவிரம் காட்டி வந்தார்.
ஜன சங்கம் இவரை அலிகாரில் உள்ள அட்ராலி தொகுதியின் எம்எல்ஏ வேட்பாளராக அறிவித்தது. அப்போது அவருக்கு வயது 30. அப்போது அவர் தோல்வியை தழுவியிருந்தாலும், அரசியல் பயணத்தை தொடர்ந்தார். 1967ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். அதன்பிறகு 13 ஆண்டுகள் அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. பின்னர் 1980ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் கானிடம் தோற்றுப்போனார். ஆனாலும், அட்ராலி தொகுதியை தனதாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. 1985ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். அன்றிலிருந்து 19 ஆண்டுகள், அதாவது 2004 வரை அட்ராலி தொகுதியை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
பாபர் மசூதி பிரச்சி0னை எழுந்தபோது, தீவிர இந்துத்துவ பரப்புரையாளராக கல்யாண் சிங் செயல்பட்டு வந்தார். அவரது பேச்சு பிரிந்திருந்த பாஜகவினரை ஒன்றிணைத்தது, 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 221 இடங்களை பிடிக்க இவர் முக்கிய காரணமாக இருந்தார். இதன் காரணமாக பாஜக அவரை உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக்கியது. ஆனால், அடுத்த ஆண்டே பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், கல்யாண் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1993ஆம் ஆண்டு அட்ராலி, கஸ்கஞ்ச் தொகுதிகளின் மக்கள் இவரை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். ஆனால் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்தியது. எனினும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டதால் 4 ஆண்டுகளில் ஆட்சி கலைந்தது.
அடுத்த தேர்தலுக்கு ஒரு ஆண்டு இருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது பாஜக. ஒப்பந்தப்படி முதல் 6 மாதம் மாயாவதி முதலமைச்சராக இருக்க வேண்டும். ஆனால், 6 மாதம் முடிந்தபின் பகுஜன் சமாஜ் தரப்பு குழப்பத்தை ஏற்படுத்தி ஆதரவை வாபஸ் வாங்கியது. இதனால் மீண்டும் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் நரேஷ் அகர்வால் எனும் காங்கிரஸ் எம்எல்ஏவை தன் பக்கம் ஈர்த்து, அவர் உதவியுடன் கல்யாண் சிங் ஆட்சியை பிடித்தார். நரேஷ் அகர்வாலுக்கு மின்சாரத் துறையை ஒதுக்கினார்.
90-களின் இறுதியில் தேசிய அரசியலின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக கல்யாண் சிங் கருதப்பட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் உடன் ஏற்பட்ட முரண் காரணமாக, 1999ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகினார். அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் கட்சியில் இணைந்தார்; புலந்த்சார் மக்களவை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 2009ஆம் ஆண்டு உள்கட்சி பூசல் காரணமாக மீண்டும் பாஜகவில் இருந்து விலகினார். இந்தமுறை உத்தரப் பிரதேச மாநிலம் எடா மக்களவை தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். அதன்பிறகு ஜன கிராந்தி கட்சி எனும் புதிய கட்சியை தொடங்கினார்.
2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது பாஜக தலைவர் நிதின் கட்கரி முயற்சியால் தனது ஜன கிராந்தி கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி பாஜக அவருக்கு ராஜஸ்தான் ஆளுநர் பொறுப்பை வழங்கியது. 2015 ஜனவரி மாதம் ஹிமாச்சல பிரதேச ஆளுநர் எனும் கூடுதல் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது அரசியல் திருப்பங்கள், முடிவுகளைக் கடந்து பெரிய தலைவராக பார்க்கப்படுகிறார். உத்தரப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் ஆளுமையாக அவர் காலம் கடந்து நிற்பார்.