இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் சென்ற விவகாரம் தொடர்பாக ஒரு சிறார் உட்பட இரண்டு பேரை, மணிப்பூர் காவல்துறையினர், ஜுலை 22ஆம் தேதி கைது செய்து உள்ளனர்.
இந்த விவகாரத்தில், வைரலான வீடியோவில் காணப்பட்ட ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய பல மறைவிடங்களில் சோதனை நடத்தி மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மே மாதம் 3ஆம் தேதி முதல் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் குறித்து மணிப்பூர் காவல்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "2023 மே 4 ஆம் தேதி இரண்டு பெண்களின் வைரல் வீடியோ தொடர்பாக, மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் இதுவரை ஐந்து முக்கிய குற்றவாளிகள் மற்றும் ஒரு சிறார் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக, 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த கொடூரமான சம்பவத்தின் 26 வினாடி வீடியோ வெளியாகி ஒரு நாள் கழித்து, மற்ற நால்வரும் வியாழக்கிழமை (ஜூலை 20ஆம் தேதி) கைது செய்யப்பட்டனர். இரண்டு பெண்களும் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 21ஆம் தேதி) 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவர், அஸ்ஸாம் படைப்பிரிவில் சுபேதாராகப் பணியாற்றி, கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில் ஜூன் 21ஆம் தேதி வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் 4ஆம் தேதி,இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி அணிவகுத்து மற்றவர்களுக்கு முன்பாக பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதற்கு முன்பு ஒருவர், தனது சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்யாமல் பாதுகாக்க முயன்றதால், கும்பலால் ஒருவர் கொல்லப்பட்டதாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மற்றொரு சம்பவத்தில், பழங்குடி இனப் பெண் ஒருவர் சைகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதில், , தனது 21 வயது மகளும், அவளது 24 வயது தோழியும் 100 முதல் 200 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், மே 4ஆம் தேதி கொனுங் மாமாங் பகுதிக்கு அருகிலுள்ள அவர்களது வாடகை வீட்டில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புகாரின் பேரில் மே 16ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இரண்டு பெண்களும் கார் கழுவும் கடையில் வேலை செய்து வந்தனர் மற்றும் இம்பாலின் கிழக்கில் உள்ள கொனுங் மாமாங்கில் வாடகைக்கு தங்கியிருந்தது குறிப்பிடத்தகக்து.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 153ஏ (வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல்), 398 (கொள்ளைக்கு முயற்சித்தல்), 436 (வீட்டை அழிக்க தீ அல்லது வெடிமருந்துகளைப் பயன்படுத்துதல்) மற்றும் 448 (வீடு-டிரெஸ்பாஸ்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருந்தபோதிலும், முதல் தகவல் அறிக்கையில், கூட்டு பாலியல் வன்புணர்வு அல்லது கொலைக் குற்றச்சாட்டுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர்களது உடல்கள், இன்னும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை, இன மோதல்கள் காரணமாக அவரது குடும்பத்தினர் பார்க்க முடியாத இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு காவல் நிலையம் அதன் அதிகார வரம்பிற்கு வெளியே நடந்த குற்றத்தைப் பற்றிய புகாரைப் பெற்றால், அது பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படுகிறது. இது பூஜ்ஜிய எஃப்ஐஆர் என்பதால், இந்த வழக்கின் விசாரணையை, காவல் நிலையம் எடுத்தவுடன் மற்ற பிரிவுகளைச் சேர்க்க முடியும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழ்நாட்டில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை!