உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்ஏ பாப்டே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி ரமணா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, இவர் தலைமை நீதிபதி பதவியில் தொடர்வார்.
ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது, இது இரண்டாவது முறை. முன்னதாக, 1966 முதல் 1967 வரை, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்பா ராவ் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார். ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த என்.வி.ரமணா, கடந்த 2000ஆம் ஆண்டில் ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். பின்னர், 2013இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
முன்னதாக, நேற்று ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டேவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன் என்றார். நாட்டின் 47ஆவது தலைமை நீதிபதியாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாப்டே பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா உயிரிழப்பு: ஆம்புலன்சிலிருந்து கீழே விழுந்த உடல்... ஷாக்கிங் வீடியோ!