பாஜகவின் மேலிடத் தலைவர்கள் பலரும் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நேற்று (ஜூன்.06) மாலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, தேசிய பொது செயலாளர்கள் பி.எல்.சந்தோஷ், அருண் சிங், பூபேந்தர் யாதவ், சிடி ரவி, கைலாஷ் விஜய் வர்கியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி
கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிர பாதிப்பு, அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஆகியவை பாஜகவுக்கு பின்னடைவைத் தந்துள்ளன. கோவிட்-19 இரண்டாம் அலை உயிரிழப்புகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி திட்டத்தில் குளறுபடி உள்ளிட்டவை மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனக் கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்த விவகராத்தில் இழந்த இமேஜை சரிகட்ட வேண்டிய அவசியம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்து வரப்போகும் மாநிலத் தேர்தல்களில் அதிருப்திகளை சீர்செய்து மக்களை சந்திப்பது எப்படி, அதற்கான களப்பணிகளை முன்னெடுப்பது எப்படி என்பன குறித்து கூட்டதில் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அண்மையில் மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி கட்சி முதலிடம் பிடித்து அதிர்ச்சியளித்துள்ளது.
அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி பின்னடைவு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுறது. இது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’போலி செய்திகளை பரப்பி கரோனா மரணங்களை மறைக்கும் பாஜக அரசு’ - பிரியங்கா காந்தி