டெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்லோவில், இந்திய ராணுவ சிறப்புப் படைகள் மற்றும் அமெரிக்க ராணுவ சிறப்பு படைகள் இணைந்து, 'எக்ஸ் வஜ்ர பிரஹார் 2022' என்ற கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த பயிற்சி, இரு ராணுவப்படையினருக்கும் இடையிலான செயல்பாடுகளை மேம்படுத்தும்.
கூட்டுப் பணி திட்டமிடல், சிறந்த செயல்பாட்டு உத்திகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த கூட்டுப்பயிற்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படுகிறது.
அடுத்த 21 நாட்களில், இருநாட்டு படைக்குழுக்களும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி, வான்வழி பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும். மலைப்பகுதிகளில் வழக்கமாக செய்யும் பயிற்சிகளும், வழக்கத்திற்கு மாறான சிறப்பு பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த கூட்டுப்பயிற்சி இருநாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நட்புறவை வலுப்படுத்தும். இது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கையாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவு!