ஜோத்பூர்: மத்திய பிரதேச மாநிலம் ஜோத்பூரில், கட்வாட் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் நேற்று(ஜூலை 11) சிஆர்பிஎஃப் வீரர் நரேஷ் ஜாத், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து நரேஷின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நரேஷை துன்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நரேஷின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் நரேஷின் தந்தை வலியுறுத்தினார்.
இந்த நிலையில், நரேஷ் பணிபுரிந்த அந்த சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில், கடந்த சில ஆண்டுகளில் மேலும் இரண்டு வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. நரேஷை சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட ஆய்வாளர் விகாஷ் குமாரின் மனைவி சவிதா, நரேஷின் குடும்பத்தினரை காண வந்திருந்தார். அப்போது அவர் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சவிதா, "உதவி கமாண்டன்ட் சஞ்சய் மற்றும் டிஐஜியால்தான் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு வீட்டிற்கு வர விடுமுறை பெற்றிருந்தார். அந்த நேரத்தில், அவரை காய்கறிகள் வாங்க அனுப்பியுள்ளனர். அதில் கெட்டுப்போன பப்பாளிப் பழம் இருந்ததால், உயர் அதிகாரிகள் இருவரும் எனது கணவரை கடுமையாக திட்டி, அவமதித்தனர்.
அதனால்தான் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். எனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. விகாஷ் சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். இதேபோல் கடந்த 2019ல் மீரட்டை சேர்ந்த பொறியாளரான சந்தீப் கிரி தற்கொலை செய்து கொண்டார். பயிற்சி மையம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஜோத்பூரில் CRPF காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை