ஜம்மு - காஷ்மீர்: யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க விரைவில் ஹெலிகாப்டர் சேவைகளை அறிமுகப்படுத்த ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக அம்மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இத்திட்டம் குறித்து பேசிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் ஆலோசகர் பஷீர் அகமது கான், ”தால் ஏரி, அதனை ஒட்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் பறந்தபடி பார்வையிட விமான சஃபாரி பயணத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த நடவடிக்கை யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும். அவர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவங்களை வழங்கும். முக்கியமான இடங்களுக்கிடையில் இணைப்பை உருவாக்குவதற்கும், அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் ஹெலிகாப்டர் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், திட்டத்திற்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு, விமான ஓட்டுனர்கள், பணியாளர்கள் குறித்த முறையான ஆய்வு மேற்கொள்ளுமாறும் சுற்றுலாத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்திய கான், இந்த முயற்சிகள் கரோனாவால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொலைதூர இடங்களில் புதிய சுற்றுலாத் தலங்களை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக அம்மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஏற்கனவே வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு!