ரஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் நடைப்பயிற்சியின்போது ஜூலை 28ஆம் தேதி ஆட்டோ மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த நீதிபதி பல்வேறு முக்கிய கொலை வழக்குகளை விசாரித்துவந்த நிலையில், அவரது உயிரிழப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் இந்த வழக்கை மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனிடையே நீதிபதி மீது மோதிய ஆட்டோ காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர்.
இப்படி பல்வேறு திருப்பங்களுக்கு இடையில், சிபிஐ அலுவலர்கள் சிசிடிவி, தடயவியல் ஆதாரங்கள், முப்பரிமாண ஆய்வு உள்ளிட்டவற்றை மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சிபிஐ, " நீதிபதி உத்தம் ஆனந்த் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் மிகப்பெரும் உள்நோக்கம் உள்ளது. தற்போது வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள சதிச் செயல்கள் குறித்து விரைவில் கண்டுபிடிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தன்பாத் நீதிபதி கொலை வழக்கு- சிபிஐக்கு மாற்றம்!