ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், அரசு இளநிலை பொறியாளராக இருந்த ராம் பினோத் பிரசாத் சின்ஹா என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்தனர்.
இவர் தனது பதவியை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சின்ஹா மற்றும் அவர் குடும்பத்தினரின் பெயரில் இருந்த, சுமார் 4 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் மற்றும் சில மாநிலங்களில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக ஜார்க்கண்ட் மாநில சுரங்கத்துறை செயலர் பூஜா சிங்காலின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் 19 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைதான பொறியாளர் சின்ஹா பணியாற்றிய குந்தி மாவட்டத்தில், பூஜா சிங்கால் துணை ஆணையராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?