ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 19 வயது இளம்பெண், திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், அவரது ஆண் நண்பரால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தும்கா போலீசார் தரப்பில், பால்கி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் ராவுத் என்பவரும் 2019ஆம் முதல் நட்பாக பழகி வந்துள்ளனர். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜேஷ் ராவுத்துக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இதன் காரணமாக அந்த இளம்பெண் ராஜேஷ் ராவுத்திடம் பேசுவதை தவிர்த்துவந்தார். ஆனால், ராஜேஷ் ராவுத் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திவந்தார். அதோடு திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஆனால் இளம்பெண் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில், நேற்று (அக். 6) அந்த இளம்பெண் அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது ராஜேஷ் ராவுத் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அதன்பின் அங்கிருந்து தப்பியோடினார்.
இதனால் பலத்த தீக்காயமடைந்த இளம்பெணை உறவினர்கள் ஃபுலோ ஜானோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (அக். 7) பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தலைமறைவான ராஜேஷ் ராவுத்தை தீவிரமாக தேடிவருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டி-90 பீரங்கியின் குழல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு