வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள தாலப்புழா பகுதியில் இருந்து தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று சென்றுள்ளது. மதியம் 3.30 மணியளவில் கண்ணோத் மலா பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக அந்த ஜீப் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மனந்தவாடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜீப்பில் அதிக நபர்களை ஏற்றி சென்றதால் 25 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது என்றும் தேயிலை தோட்ட பணிகளை முடித்து கொண்டு வீடு திரும்பிய போது விபத்து நிகழ்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த 9 பேரும் பெண்களும் எனவும், அனைவரும் தவிஞ்சல் பஞ்சாயத்தை சேர்ந்த கம்பமாலா பகுதியை சேர்ந்த ராணி, சாந்தா, ஷோபனா, மேரிஅக்கா, வசந்தா, ராபியா, சின்னம்மா, ஷாஜா, லீலா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநர் மணி பலத்த காயமடைந்துள்ளார். மேலும் இருவர் பலத்த காயமடைந்து மனந்தவாடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் பெரும் பாறைகள் இருந்ததால் உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நுங்கு பிரச்னையின் காரணமாக எழுந்த முன்விரோதத்தால் கத்தியால் தாக்கிய நபர்கள் - தீவிர விசாரணையில் போலீஸ்!