அகமதாபாத் : 10வது வைப்ரன்ட் குஜராத் சர்வதேச மாநாட்டை அகமதாபாத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். ஜனவரி 10 முதல் 12ஆம் தேதி வரை இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், இந்த மாநாட்டில் 34 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், 16 கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் முறையாக வைப்ரன்ட் குஜராத் சர்வதேச மாநாடு தொடங்கப்பட்ட நிலையில், அதன் 20வது ஆண்டு விழா இந்த மாநாட்டின் இடையே விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை தொழில்நுட்ப வசதிகள், தொழில் முனைவோர் உரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இந்த மாநாட்டில் நடைபெற உள்ளன.
குறிப்பிட்டத்தக்க வகையில் ஜப்பானின் அடுத்த தலைமுறை போக்குவரத்து சாதனமான பறக்கும் கார் இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த பறக்கும் கார் தயாரிப்பு ஈடுபட்டு உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கை ட்ரைவ் தனது பறக்கும் கார் மாடலை இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
பைல்ட் உள்பட 3 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த பறக்கும் கார் அடுத்த தலைமுறை போக்குவரத்திற்கான தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள இந்த பறக்கும் கார் முற்றிலும் மின்சார பேட்டரியில் இயங்கக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் என்றும், இந்த கார் மூலம் உத்தேசமாக 15 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பானின் சுசுகியில் இந்த பறக்கும் கார் தயாரிப்புக்கான தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில், அடுத்த கட்டமாக இந்தியாவில் இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும் இந்த சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்ப உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பிரான்ஸ் புதிய பிரதமர் நியமனம்! திடீர் பிரதமர் மாற்றத்திற்கு என்ன காரணம்?