ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் டசல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர்களைச் சுற்றி வளைக்கத் திட்டமிட்ட ராணுவம் மற்றும் அம்மாநில காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியை நேற்று இரவு சுற்றி வளைத்தனர்.
இதனை சுதாரித்துக்கொண்ட பயங்கரவாதிகள் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். அது மட்டுமின்றி ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். இதனால் பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் பயங்கரவாதிகளில் ஒருவரைச் சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் மாநில கூடுதல் காவல்துறை இயக்குநர் ஏடிஜிபி முகேஷ் சிங் உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஏக்நாத் ஷிண்டே - சரத் பவார் திடீர் சந்திப்பு... மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்?
மேலும், அங்குள்ள பாரமுள்ளா மாவட்டத்தில், லஷ்கர்-இ-தொய்பா(Lashkar-e-Taiba) இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, அங்குள்ள ஃப்ரெஸ்டிஹார் வாரிபோரா கிராமத்தில் பாதுகாப்புப்படை அதிகாரிகள் மொபைல் வாகன சோதனைச்சாவடியை அமைத்துச் சோதனையிட்டு வந்துள்ளனர்.
சோதனைச் சாவடியைக் கவனித்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப்படை அதிகாரிகள், பயங்கரவாதிகள் இருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சுஹைல் குல்சார் மற்றும் வசீம் அகமது படா என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியா - நேபாளம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கம்!
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது கிரீரி காவல் நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து, இரண்டு சீனத் துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் விவகாரம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.