ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செப். 9ஆம் தேதி 108 வயது மூதாட்டி ஒருவர் 2 கணுக்கால்கள் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பிரகாஷ் பிரஜாபத் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே நேற்று (அக். 11) மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தரப்பில், பிரகாஷ் பிரஜாபத் 4 ஆண்டுகளாக மூதாட்டியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.
அதே பகுதியில் டீ கடையை நடத்திவந்தார். அவருக்கு நிறைய கடன்கள் இருந்துள்ளன. இதனால், செப். 9ஆம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மூதாட்டியின் கணுக்கால்களை வெட்டி அவரது கால்களில் இருந்த வெள்ளி கொலுசுகளை திருடி சென்றுள்ளார். இதனை விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். அந்த வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சம்பவத்தன்று பிரகாஷ் மூதாட்டி வீட்டிற்குள் செல்வதும், வருவதும் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கைது செய்தோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் ரூ.47 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்