புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டம் ஆச்சன் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த இவர், உள்ளூர் பாதுகாப்பு படை வீரராக இருந்து வந்தார். வங்கி ஒன்றில் பாதுகாவலராகவும் பணியாற்றினார். இந்நிலையில் இன்று (பிப்.26) காலை, வீட்டின் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சஞ்சய் சர்மா மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் சஞ்சயை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, "இதுபோன்ற கொடூர தாக்குலை ஏற்றுக் கொள்ள முடியாது. சஞ்சயின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு 3 காஷ்மீர் பண்டிட்கள் உட்பட, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்ளவையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.