ஜம்மு காஷ்மீர் : டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் ஜி- 20 மாநாடு நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில், ஜி 20 அமைப்பை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஜி- 20 மாநாட்டை முன்னிட்டு, வளர்ச்சியை நோக்கிய பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜி 20 மாநாட்டிற்கான சுற்றுலா பணிக்குழு கூட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்னும் இரு தினங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அங்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், ஸ்ரீநகரில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், அவர்களின் கூட்டாளிகள் உள்ளிட்டோரின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். காஷ்மீர் பிரிவில் உள்ள ஸ்ரீநகர், புல்வாமா, குப்வாரா, அவந்திப்புரா, அனந்த் நாக் உள்ளிட்ட இடங்களிலும், ஜம்மு பிரிவின் பல்வேறு இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.
தெற்கு காஷ்மீர் பகுதியின் கூசு, நேஹ்மா, தாபர்புரா உள்ளிட்ட பகுதிகளில், அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜமாத் இ இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடையவர்கள் அங்கு பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு சோதனைகள் நடைபெற்று உள்ளன. அங்கு சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம், மொபைல் போன் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டன.
புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையின் போது, அதிக அளவிலான காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி, இப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்படுவதாக, வந்த தகவலை அடுத்து, சமீபத்தில் அங்கு நடைபெற்ற சோதனையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜி 20 மாநாட்டிற்கான சுற்றுலா பணிக் குழு கூட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், மே மாதம் 22 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 60க்கும் மேற்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்ட சோதனைகளில் , பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் ஐக்கிய விடுதலை முன்னணி (ULF J&K) மற்றும் ஜம்மு & காஷ்மீர் சுதந்திரப் போராளிகள் (JKFF) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே, இந்த சோதனைகள் என்று, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: "சர்ச்சைக்குரிய பகுதி ஜம்மு காஷ்மீர்"... ஜி20 கூட்டத்தை புறக்கணித்த சீனா!