ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதய்வாலாவில் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் கே லோகியா நேற்று(அக்.3) அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்தறுக்கப்பட்டுள்ளதாகவும், உடலில் தீக்காயங்கள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அவரது வீட்டில் வேலை செய்த யாசிர் அகமது என்பவர் தலைமறைவாகிவிட்டதால், அவர் டிஜிபிபை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஏடிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், "சம்பவ இடத்திலிருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகளில், நபர்கள் சிலர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. தலைமறைவாக உள்ள யாசிர் அகமது டிஜிபியின் வீட்டில் சுமார் ஆறு மாதங்கள் வேலை செய்தார்.
அவர் மிகவும் ஆக்ரோஷமான இயல்பு கொண்டராக இருந்தார். மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை. அதேநேரம் முழுவீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவரைப் பற்றி தகவல் கிடைத்தால், பொதுமக்கள் காவல் துறையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காஷ்மீர் சென்றுள்ளார். இந்த நிலையில் டிஜிபி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரில் டிஜிபி கொலை... பயங்கரவாத அமைப்பு காரணமா..?