ஜம்மு காஷ்மீர்: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள புட்கம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து, காவல் துறையினர் கூறுகையில், "மகம் பகுதியில் ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் காவல் படையினரின் உதவியோடு புட்கம் காவல் துறையினர் இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர்.
தளபதிகளுடன் கூட்டு
இவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் உதவியாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. ஒருவரின் பெயர் முகமது ஷஃபி கனி, மற்றொருவர் ஜாகூர் அகமது சோபன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றனர்.
முதல்கட்ட தகவலின்படி, கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதிகளுடன் மிகுந்த தொடர்பில் இருப்பவர் என்றும், அவர்களுடைய போக்குவரத்திற்கு உதவுபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் கௌசா, ரஸ்வின், ரத்சன், மஜாமா, பஞ்சுரா, கன்சார், மமூசா ஆகிய பகுதிகளில் உள்ள தளபதிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள். இருவரின் மீது காக் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.