டெல்லி: ஜம்முவைச் சேர்ந்த ககன்தீப் சிங்(22) என்பவர், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத்துடன் இத்தாலியில் வசித்து வருகிறார். இந்தியாவில் 9ஆம் வகுப்பு வரை படித்த அவர், இத்தாலி சென்று பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இந்தியா வந்திருந்த ககன்தீப் சிங், இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரைப் போல, போலியான வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி மோசடி செய்ய முயன்றுள்ளார். ஜகதீப் தன்கரின் புகைப்படத்தை புரொஃபைலில் வைத்து, அவரைப் போலவே போலியான வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளார்.
பிறகு முக்கிய அரசு அதிகாரிகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சமூக வலைதளங்கள் மூலம் சேகரித்துள்ளார். பின்னர் போலி வாட்ஸ்அப் கணக்கிலிருந்து, அந்த அதிகாரிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். துணை குடியரசுத் தலைவர் போன்ற பாணியில் பேசி பல்வேறு உதவிகளை செய்து தரக்கேட்டுள்ளார்.
இந்தச் சூழலில், ககன்தீப் சிங் ஆள்மாறாட்டம் செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விசாரணை மேற்கொண்ட போலீசார், டெல்லி விமான நிலையத்தில் ககன்தீப் சிங்கை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து ஸ்மார்ட் போன்களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ககன்தீப் சிங் இந்த போலியான வாட்ஸ்அப் கணக்கை வைத்து மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆதாயம் தேட முயற்சித்ததாகவும், பல யூடியூப் வீடியோக்களை பார்த்தே அவர் இந்த மோசடியை செய்ய துணிந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ககன்தீப் சிங்கிற்கு உதவிய அவரது நண்பர் அஸ்வனி குமார் (29) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள பெண்