ஹைதராபாத்: டிசம்பர் 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நிகழ்ந்த வன்முறைத் தாக்குதல் உலகத்தைப் புரட்டிப்போட்ட சம்பவம். அமெரிக்கா வெட்கத்தில் தலைகுனிகிறது. உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இருந்த அதிகாரத்தின் அழிவை, குறிப்பால் உணர்த்தும் சமிக்ஞை இது, இதுதான் ஆரம்ப நிலை.
தான் ஒரு ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கம் என்று இனிமேல் அமெரிக்கா பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது; ஏனென்றால் அந்தத் தேசத்தில் சீரழிவு ஆழங்காற்பட்டிருக்கிறது, என்கிறார் மூத்தப் பத்திரிகையாளரான ஆதித்யா சின்ஹா. பிரபல ஆங்கில நாளிதழான டிஎன்ஏ, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரோனிக்கிள் ஆகிய நாளேடுகளில் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், அமெரிக்காவில் பள்ளிப்படிப்பையும், பட்டப்படிப்பையும் முடித்தவர்.
மேலும் அமெரிக்கா அரசியலையும், அரசமைப்பையும் கூர்ந்து நோக்கும் அவதானிப்பாளர். ஈடிவி பாரத்தின் சென்னைத் தலைமை நிருபர் எம் சி ராஜனுடன் காணொலி வாயிலான விவாதத்தில், நாடாளுமன்ற கலவரத்தைப் பற்றியும், அமெரிக்கா ஜனநாயகத்திற்கும் அரசியல் கட்டுமானத்திற்கும் அது இனி என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
“இதன் (கலவரத்தின்) தாக்கம் இப்போது தெரியாது; இன்றோ, நாளையோ கூடத் தெரியாது. இனிவரும் ஆண்டுகளில்தான் தெரியும். 1945-இல் இங்கிலாந்து சென்ற பாதையில் அமெரிக்கா இப்போது போய்க்கொண்டிருக்கிறது. இது ஒரு திருப்புமுனைக் கணம். இது முடிவல்ல; அமெரிக்க அழிவின் ஆரம்பம். தீவிர வலதுசாரிப் போக்கு மேலும் மேலும் பலம்பெற்று அமெரிக்காவின் அரசியலைத் தொடர்ந்து பேரச்சத்திற்கு ஆளாக்குகிறது என்பதின் அடையாளம்தான் இது.
வெறுப்பு அரசியல், இனத்துவேஷம் கொடிகட்டிப் பறக்கின்றன; அத்தோடு, அடிப்படைவாத வெள்ளைப் பேரினவாதத்தவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பின்னே அணிவகுத்து நிற்கின்றனர். தாறுமாறாக பணிசெய்யும் ட்ரம்பின் பாணியும், அவரது அகந்தைக் குணமும் அவர்களின் நலனுக்கு ஒத்ததாக இருந்து, பிளவு நெருப்புக்கு மேலும் நெய் வார்க்கின்றன.
இப்போதைய நாடாளுமன்றத் தாக்குதலுக்கு முன்பாகவே, பல சமூக ஆர்ப்பாட்டங்களில் தீவிர வலதுசாரிக் கலகக்காரர்கள் துப்பாக்கிகளைக் காட்டி பயமுறுத்தி அச்சமற்று செயல்பட பழகிவிட்டனர். அப்படிப் பார்க்கும்போது, அவர்களுக்கு இது ஒரு தீவிரவாதச் சின்னமான கணமாகும். அதிகாரப்போதையும், அளவுகடந்த அகந்தையும் தன்னைத் தானே ஆராதிக்கும் மனநிலையும் கொண்டவர் ட்ரம்ப் என்பது ஆகப்பெரிய விசயமல்ல.
அவர் அரசியல்வாதிகளுக்கும் எதிரானவர்; அரசியல் தேவைகளுக்கேற்றபடி நடந்துகொள்ளாத தொழில்நுட்ப அதிகாரிகளைச் சாடுபவர் அவர் என்பதே அவர்களுக்குப் போதும். நாடாளுமன்ற வன்முறை சரியானது என்று குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில் 45 விழுக்காட்டினர் கலவரத்தை ஆதரிக்கின்றனர் என்று யூகோவ் கருத்துக்கணிப்பு சொல்கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஜெர்மானிய நாடாளுமன்றத்தை எரித்துவிட்டு பழியை கம்யூனிஸ்ட்டுகள் மேலே போட்ட ஹிட்லருக்கும், டிரம்பிற்கும் இடையே ஓர் ஒட்டுறவைக் காண்கிறார் சின்ஹா. சின்ஹாவைப் பொறுத்தமட்டில், ட்ரம்ப் தான்சார்ந்த குடியரசுக் கட்சிக்குக் குந்தகம் விளைவித்துவிட்டார் என்பதே நிஜம். மிட் ரோம்னி போன்ற குடியரசுக் கட்சியின் மேல்தட்டு வர்க்கத்தினரை ஓரங்கட்டியது டிரம்ப்தான். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிடுவார். அதன்மூலம் கட்சியில் பிற போட்டியாளர்களின் நம்பிக்கைகளை அவர் தவிடு பொடியாக்கிவிடுவார். இரண்டு ஆண்டுக்குப் பின்வரும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்திக்க நேரலாம்.
அதிபர்க்கெதிரான பதவிநீக்க நடவடிக்கை மற்றும் 25-ஆவது சட்டத்திருத்தம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும்போது, ஜனநாயகக் கட்சியிலிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் இதுசம்பந்தமாக ஒருமித்த குரல்கள் எழுந்தபோதும், இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று சின்ஹா சொல்கிறார். ஏற்கனவே மிரண்டும்போன ட்ரம்ப் வேகவேகமாகப் பின்வாங்கிவிட்டார். மேலும், ஜனநாயகக் கட்சியினர் தங்களுக்குக் கிடைத்த இந்த அரசியல் லாபத்தை வீணடிக்க மாட்டார்கள்; மாறாக அவர்கள் இதைத் தங்களை மேலும் பலப்படுத்திக் கொள்ள பயன்படுத்துவார்கள். அதிகப்பட்சம், ட்ரம்ப் மேலும் கோமாளித்தனமாக எதையாவது செய்வதைத் தடுக்கும் தந்திரம்தான் இதெல்லாம்.
கலவரத்திற்கு இட்டுச்சென்ற முன்னோட்ட நடவடிக்கைகளில் கட்சி சார்பான ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பங்கு இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் சின்ஹா இது இந்தியாவுக்கும் ஒரு பாடம் என்று எச்சரிக்கிறார். ஆனால் நாடாளுமன்றத் தாக்குதல் தலைவர் இல்லாத ஒரு வெறிக்கும்பலால் நிகழ்த்தப்பட்டது என்பதை அவர் மறுதலிக்கிறார். ஏனென்றால் இப்போது வெளியெறும் அதிபர்தான் இதன் தலைவர். அவரது கண்ணசைவில்தான் இந்த வன்முறை நாடகம் அரங்கேறியது என்று சொல்கிறார் சின்ஹா.
இதையும் படிங்க : ட்ரம்ப் பதவி விலகுவதுதான் அமெரிக்காவின் நலனா?